சிலருக்கு இளம் வயதிலேயே முடி கருமையாக இல்லாமல் வயதான தோற்றத்திற்கு மாறிவிடுகிறது. மேலும் சிலருக்கு தலையில் கை வைத்தாலே போதும் கொத்துக் கொத்தாக முடி கொட்டும். இதற்கு முடியின் வேர்க்கால்களில் சத்து குறைபாடு ஏற்படுவதை காரணமாகும். கருவேப்பிலை நம் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. இந்த கருவேப்பிலை வைத்து எளிமையான தொக்கு செய்வதற்கான ரெசிபியை இந்த விளக்கத்தில் பார்ப்போம்…
கருவேப்பிலை அதிகமாக கிடைக்கும் நாட்களில் இது போன்ற தொக்கு ஒன்றை தயார் செய்து வைத்து ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாமல் சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
இதற்கு முதலில் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரின் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலை, சிறிய எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி, காரத்திற்கு ஏற்ப 15 முதல் 20 காய்ந்த வத்தல், இரண்டு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து மையாக அரைக்க வேண்டும்.
உப்பு மற்றும் காரம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளலாம். தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு ஒரு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இந்த தொக்கு செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தலாம் அதுவும் சற்று தாராளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக 5 பல் வெள்ளை பூண்டுவை தட்டி சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளைப்பூண்டு எண்ணெயோடு சேர்த்து நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் இந்த கலவையை நன்கு கொதிக்க விட வேண்டும்.
மூடி போட்டு 10 முதல் 15 நிமிடம் தொக்கு நன்கு கொதித்து வரவேண்டும். 15 நிமிடம் கழித்து கடாயின் ஓரங்களில் எண்ணெய் ன்னை பிரிந்து இருந்தால் தொக்கு தயாராக மாறிவிட்டது. இப்பொழுது இதை கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி விடலாம்.
ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத இந்த கருவேப்பிலை தொக்கு சூடான சாதம் மட்டுமல்லாமல் பழைய சாதத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.