காளானில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த காளான் வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாக பிரியாணி கிரேவி செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் பச்சை மிளகாய் காளான் கிரேவி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ. இந்த காளான் கிரேவி செய்வதற்கு மிளகாய் தூள் பயன்படுத்தாமல் பச்சை மிளகாய் பயன்படுத்தியதால் சற்று சுவை வித்தியாசமாகவும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் விதத்திலும் இருக்கும்.
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு ஸ்டார் பூ, இலவங்கம் 4, பட்டை 3, ஏலக்காய் மூன்று, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய் பாதியாக வெந்ததும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு சிறிய தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
இதை அடுத்து இரண்டு தேக்கரண்டி தனியாத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை கடாயில் வதக்க வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் காளானை இதில் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாக்களுடன் காளான் ஒரு சேரும் வகையில் கலந்து கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து காளான் கிரேவியை மூடி போட்டு வேக வைக்கவும். குறைந்தது பத்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் காளான் கிரேவி வேக வேண்டும்.
காளான் நன்கு வெந்து கிரேவி கெட்டியாக மாறும் பொழுது அடுப்பை அணைத்து விடலாம். இறுதியாக வாசனைக்கு கைப்பிடி அளவு கருவேப்பிலை கொத்தமல்லி புதினா இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பச்சை மிளகாய் காளான் கிரேவி தயார். இந்த கிரேவி சப்பாத்தி மற்றும் பூரிக்கு சிறந்த சைடிஷ்ஷாக இருக்கும்.