பஞ்சு மாதிரி இட்லி இருந்தாலும் அந்த இட்லிக்கு சைடிஷ் ஆக மணக்க மணக்க கமகம சாம்பார் இருந்தால் மட்டுமே சலிக்காமல் சாப்பிட முடியும். இட்லிக்கு சாம்பார் என வைத்து சாப்பிடாமல் சாம்பாருக்கு இட்லி என தட்டு நிறைய சாம்பார் வைத்து இட்லியை அதில் சேர்த்து சாப்பிடும் பொழுது கிடைக்கும் திருப்தி அமோகமாக இருக்கும். மூன்று இட்லி சாப்பிடுபவர்கள் கூட ஐந்து, எட்டு என சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த இட்லி சாம்பார். வாங்க ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
ஒரு குக்கரின் ஒரு கப் துவரம் பருப்பு, இரண்டு தேக்கரண்டி பாசிப்பருப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அகலமான கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம், 3 காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதை அடுத்து 10 முதல் 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் பொழுது நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீளவாக்கில் இரண்டாக கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கும் நேரத்தில் ஒரு சிறிய துண்டு இஞ்சி இடித்து சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து மசாலா பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா கொதிக்க விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை முழுமையாக சென்ற பிறகு நாம் வேக வைத்திருக்கும் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு ஊறவைத்த புளி கரைசல், ஒரு சிறிய துண்டு வெள்ளம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது அனைத்து மசாலாவையும் ஒருசேர கலந்து கொடுத்து ஒரு கொதி வரவும் இறக்கிவிட வேண்டும். இறக்கும் பொழுது கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் தயார்.