காலை உணவுக்கு சத்தான ரெசிபி.. ஈஸியா செய்யலாம் ஓட்ஸ் தோசை…!

காலை உணவை பெரும்பாலும் ஆரோக்கியமான ஒன்றாக தொடங்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். அப்படி ஆரோக்கியமான ஒரு காலை உணவு தான் ஓட்ஸ். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் பலரும் தேர்ந்தெடுப்பது இந்த ஓட்ஸை தான். இந்த ஓட்ஸ் வைத்து ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் தோசை என பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். தோசை பிரியர்களுக்கு என இந்த ஓட்ஸை வைத்து எப்படி அட்டகாசமான ஓட்ஸ் தோசை செய்யலாம் என்பதைப் பார்ப்போம். இந்த ஓட்ஸ் தோசை செய்வதற்கும் சுலபமானது. மேலும் சுவை நிறைந்த இந்த ஓட்ஸ் தோசையானது உடல் நலத்திற்கும் நன்மை தரக்கூடியது.

ஓட்ஸ் தோசை செய்வதற்கு முதலில் ஒரு கப் ஓட்ஸை அரை மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். ஓட்ஸ் நன்கு உறிய பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீரை வடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். 3 பச்சை மிளகாய்களை கீறி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சி, அரை ஸ்பூன் சீரகம், சிறிதளவு பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் உள்ள ஓட்ஸோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ் ஏற்கனவே ஊற வைக்கப்பட்டு இருப்பதால் இதில் தண்ணீர் ஏதும் சேர்க்க தேவையில்லை. அதில் உள்ள ஈரத்தன்மை போதுமானது. தண்ணீர் சேர்க்காமல் இதனை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் நன்கு அரை பட்டதும் இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது தண்ணீர் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் தோசை மாவு பதத்திற்கு வரும்படி நன்கு கரைத்துக் கொள்ளவும். தோசை கல்லை காயவைத்து கல் காய்ந்ததும் இப்பொழுது தயாரித்த மாவை கொண்டு நெய் அல்லது எண்ணெய் பயன்படுத்தி தோசைகள் சுடலாம். இந்த தோசை அனைத்து வகையான சட்னிகளுடனும் நன்றாக இருக்கும்.

அவ்வளவுதான் சுவையான ஓட்ஸ் தோசை தயாராகி விட்டது.

Exit mobile version