ஃப்ரைட் சிக்கன் அனைவரும் வாங்கி ருசித்து உண்ண வேண்டும் என்று நினைக்கக்கூடிய உணவு. சிக்கனை ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் சாப்பிட்டாலும் அசைவப் பிரியர்களுக்கு சிக்கனின் மீது உள்ள ஆர்வம் குறையவே குறையாது. சிக்கனை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ஃப்ரைட் சிக்கன் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால் பலர் உண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அடிக்கடி கடைகளுக்குச் சென்று உண்பது என்பது முடியாத ஒன்று. மேலும் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு தரலாம். இந்த ஃப்ரைட் சிக்கன் கடைகளில் மட்டும்தான் சாப்பிட முடியும் என்று இல்லை நீங்களே வீட்டில் மொறுமொறுவென ஃப்ரைட் சிக்கன் செய்ய முடியும்.
மீனை வைத்து இப்படி ஒரு ரெசிபியா? கேரளா ஸ்டைலில் சூப்பரான மீன் பொழிச்சது!!!
இந்த ஃப்ரைட் சிக்கன் செய்வதற்கு எட்டு சற்று பெரிய துண்டுகளாக உள்ள கோழிக்கறிகளை வாங்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் தயிர் சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் ஒரு கப் பால் சேர்க்கவும். ஒரு முட்டையை நன்கு அடித்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மிளகு தூள் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது, இரண்டு ஸ்பூன் பூண்டு விழுதையும் இதனுடன் சேர்க்கவும். அரை மூடி எலுமிச்சை பழத்தை இதில் பிழிந்து விடவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த கரைசலில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை பிசைந்து ஊற வைக்க வேண்டும். குறைந்தது 2 மணி நேரமாவது குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும்.
இப்பொழுது இதற்கான வெளி மாவு தயார் செய்வதற்கு ஒரு கப் அளவு மைதா மாவு, அரை கப் சோள மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் மல்லி தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், ஒரு ஸ்பூன் பூண்டின் பொடி, ஒரு ஸ்பூன் வெங்காய பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது.
இப்பொழுது ஒரு வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதிகமான தீயில் எண்ணெயை நன்கு கொதிக்க விட வேண்டும். எண்ணெய் நன்கு கொதித்ததும் ஊறி இருக்கும் சிக்கனை இந்த மாவின் மீது நன்கு பரப்பி எல்லா புறமும் மாவு ஒட்டும் படி செய்து இந்த எண்ணெயில் போட வேண்டும்.
அடுப்பு அதிகமான தீயிலேயே இரண்டு நிமிடங்கள் வரை இருக்கலாம். அதன் பின்பு மிதமான தீயில் வைத்து வேகவிடலாம். எலும்பு இல்லாத கறியாக இருந்தால் ஏழு முதல் எட்டு நிமிடங்கள் வரை பொறிக்க வேண்டும். எலும்பு உள்ள பகுதிகள் என்றால் பத்து முதல் 12 நிமிடங்கள் வரை பொறிக்கவும். வெளி மாவு அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாவு பூசும் முறையை இரண்டு முறை செய்யலாம் அதாவது ஊறிய சிக்கனில் வெளி மாவு நன்கு தடவிய பின்பு மீண்டும் அதனை ஊற வைத்த கரைசலில் மூழ்கி எடுத்து மீண்டும் வெளி மாவு பூசலாம். இப்படி இரண்டு முறை வெளிமாவு பூசி அதன் பின்னும் பொறிக்கலாம். நன்கு பொரிந்ததும் இதனை எடுத்து சாசுடன் பரிமாறலாம்.
கிராமத்து ஸ்டைலில் சூப்பரான உப்பு கறி… ஒரு முறை செய்தால் திரும்பத் திரும்ப செய்வீர்கள்!!
வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே ஜூசியாகவும் இருக்கும் சூப்பரான ஃப்ரைடு சிக்கன் தயார்.