சூடான சுவையான அடை!! காலை நேர டிபனுக்கு அடை இப்படி செய்யுங்கள்!

அடை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் வகையாகும். தினமும் தோசை, இட்லி, சப்பாத்தி என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு ஒரு சூப்பரான மாற்று உணவு தான் இந்த அடை. அடை அரிசி மற்றும் பருப்பு வகைகள் என அனைத்தும் கலந்து மிக சுவையாக இருக்கும். பெரும்பாலும் அடை செய்வது கடினம் என்று நினைத்துதான் யாரும் அதை அதிகம் அடிக்கடி செய்ய மாட்டார்கள். ஆனால் அடை தயாரிப்பது எளிதுதான். சரியான அளவில் அனைத்து அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊறவைத்து விட்டால் போதும். அடை தயாரிப்பது சுலபமாகிவிடும். மேலும் இதில் நாம் பருப்பு வகைகள் மற்றும் முருங்கைக்கீரை என சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதம் மற்றும் இரும்புச்சத்து என அனைத்து சத்துக்களும் வந்து சேரும்.

அருமை…! மூட்டு வலி பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்!

அடைக்கு மாவு தயாரிக்க முதலில் அரை கப் பச்சரிசி, அரை கப் புழுங்கல் அரிசி இவற்றை கழுவி கொள்ளவும். இந்த அரிசியுடன் அரை கப் கடலைப்பருப்பு, அரை கப் துவரம் பருப்பு, கால் கப் உளுத்தம் பருப்பு, கால் கப் பாசிப்பருப்பு ஆகியவற்றை அலசி ஒன்றாக ஊற வைக்க வேண்டும். கால் கப் ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும். இவை அனைத்தும் இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.

இரண்டு மணி நேரம் கழித்து ஊறிய அரிசி மற்றும் பருப்புடன் பத்து வர மிளகாய், இரண்டு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் சீரகம் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மாவு போல ஆட்டிக்கொள்ள வேண்டும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது மாவு கெட்டியாகவும் அதே சமயம் சற்று கொரகொரப்பாகவும் இருக்க வேண்டும். இறுதியாக தனியே ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியையும் சேர்த்து ஆட்டி எடுக்க வேண்டும்.

இப்பொழுது இந்த மாவுடன் மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காய் பூ, ஒரு கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை எல்லாவற்றையும் போட்டு ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து சளி தொந்தரவுகளையும் துரத்தி அடிக்கும் தூதுவளையை வைத்து சூப்பரான காலை நேர டிபன்! தூதுவளை அடை!!!

இப்பொழுது ஒரு தோசை கல்லை சூடு செய்து அடையை சிறிது கனமாக ஊற்றி எண்ணெய் விட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விட வேண்டும். அடை நன்கு சிவக்க வேண்டும் கருகி விடாமல் குறைவான தீயில் வேக விடவும். இதனை சூடாக எடுத்து காரச் சட்னி, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி உடன் பரிமாறலாம். அடையுடன் அவியலும் அட்டகாசமாக இருக்கும்.

அவ்வளவுதான் சூடான சுவையான அடை தயார்!!!

Exit mobile version