இந்த சட்னி சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா ஆரோக்கியத்திற்கு உகந்த பீர்க்கங்காய் வைத்து அருமையான பீர்க்கங்காய் சட்னி!

பீர்க்கங்காய் உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை அள்ளித் தருவதில் சிறந்த காயாகும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீர்க்கங்காய் நல்ல தேர்வு. குறைந்த கலோரிகளை கொண்ட இந்த காய் உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் மிகவும் உகந்தது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்திட உதவி புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் இந்த பீர்க்கங்காய் அதிகரிக்கிறது. இரும்புச்சத்து இந்த பீர்க்கங்காயில் நிறைந்துள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. பீர்க்கங்காய் நீர்ச்சத்து நிறைந்த காயாகும். இத்தனை சத்துக்கள் நிறைந்த இந்த பீர்க்கங்காய் வைத்து எப்படி சுவையான பீர்க்கங்காய் சட்னி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இட்லி தோசைக்கு சுவையான கார சட்னி…! இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!

பீர்க்கங்காய் சட்னி செய்வதற்கு கால் கிலோ அளவு பீர்க்கங்காயை எடுத்து அதன் தோலினை நன்றாக சீவி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பத்து சின்ன வெங்காயம் மற்றும் 2 பழுத்த தக்காளிகளை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி இரண்டு வரமிளகாய்களை முதலில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வெங்காயம் மற்றும் நறுக்கிய பீர்க்கங்காயை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் பீர்க்கங்காய் நன்றாக வதங்கிய பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் போட்டு வதக்க வேண்டும். தக்காளியும் மென்மையாக வதங்கிய பிறகு இவை அனைத்தையும் ஆற வைக்க வேண்டும்.

இவை நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிய அளவில் புளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும். சட்னியை அரைத்த பிறகு ஒரு சிறிய கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.

Exit mobile version