எப்போதும் முறுமுறுவென தோசை வேண்டும் இட்லி பிடிக்காது என சொல்பவர்களுக்கு இட்லியில் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது பிடிக்காத இட்லியும் விருப்பமான உணவுகளில் ஒன்றாக மாறிவிடுகிறது. இந்த முறை இட்லியை அப்படியே சாப்பிட கொடுக்காமல் குண்டூர் காரப்பொடி நெய் இட்லி செய்து ஒரு முறை கொடுத்து பாருங்கள். இதன் சுவையில் மயங்கி மீண்டும் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு அருமையாக இருக்கும். வாங்க குண்டூர் காரைக்குடி நெய் இட்லி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் இட்லி பாத்திரத்தில் நமக்கு தேவையான இட்லிகளை பத்து நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக காரப்பொடி தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பு, ஒரு கப் கடலைப்பருப்பு, ஒரு கப் முழு தனியா சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வருக்க வேண்டும்.
அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி வெந்தயம் இறுதியாக வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் அதே கடாயில் இரண்டு கொத்து கருவேப்பிலை, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் 15 முதல் 20, 10 பல் வெள்ளை பூண்டு சேர்த்து மீண்டும் நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சிறிது நேரம் ஆறவைத்து அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் பொடிக்கு தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
முட்டை வைத்து பத்தே நிமிடத்தில் அட்டகாசமான கோபி மஞ்சூரியன்! ரெசிபி இதோ….
இப்பொழுது முதலில் நாம் வேகவைத்த இட்லியை நன்கு சூடு தணிந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இட்லிகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தாராளமாக குண்டூர் காரப்பொடியை மேலே தூவி திரட்ட வேண்டும். இட்லி நெய்யோடு சேர்த்து கொடியுடன் நன்கு வாசனை வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது சுவையான குண்டூர் காரப்பொடி நெய் இட்லி தயார்.