அசைவ உணவுகளில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று மீன் குழம்பு. இந்த மீன் குழம்பு சமைப்பதற்கு கடை மசாலாக்களை பெரிதாக பயன்படுத்தாமல் வீட்டிலேயே புதிதாக மசாலாவை வறுத்து அரைத்து சமைக்கும் பொழுது சுவை சற்று கூடுதலாக இருக்கும். மேலும் இந்த மீன் குழம்பு இரண்டு மூன்று நாட்கள் வைத்து சாப்பிடும் பொழுதும் அதே சுவையில் அருமையாக இருக்கும். வறுத்து அரைத்து காரசாரமான மசாலா வைத்து கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வதற்கான ரெசிபி இதோ…
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி மல்லி, காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் 7 காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த இந்த பொருட்களின் சூடு குறைந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு 10 முதல் 15 சின்ன வெங்காயம், 5 பல் வெள்ளை பூண்டு,நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சோம்பு, 4 பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தலித்துக் கொள்ளவும். கறிவேப்பிலை நன்கு பொறிந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுவை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும். கடாயில் ஓரங்களில் மசாலாக்களில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். அதன் பின் எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்து வரும் நேரத்தில் நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை இதில் சேர்த்துக் கொள்ளலாம். மீன் சேர்த்ததும் மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை குழம்பு கொதிக்க வேண்டும்.
இறுதியாக கைப்பிடி அளவு மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வறுத்து அரைத்த மீன் குழம்பு தயார். இந்த குழம்பில் தேங்காய் சேர்க்கவில்லை என்பதினால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.