லிஸ்டில் பல வெரைட்டி சாதங்கள் இருந்தாலும்…. ரோட்டு கடை முட்டை சாதம் தனி சுவை தான்!

சாதம், குழம்பு, வெஞ்சனம் என தனித்தனியாக பல விதமான ரெசிபிகள் செய்ய முடியாத நேரங்களில் வெரைட்டி சாதம் தான் கை கொடுக்கும். தக்காளி சாதத்தில் துவங்கி எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என பல விதமான வெரைட்டி சாதங்கள் இருந்தாலும் முட்டை சாதத்திற்கு தனி மதிப்பு தான். அதிலும் ரோட்டு கடைகளில் தயார் செய்து தரப்படும் முட்டை சாதத்தில் சுவையிலும் மனத்திலும் தனி சிறப்பு தான். ரோட்டு கடை ஸ்பெஷல் முட்டை சாதம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கொள்ளவும்.
பெருஞ்சீரகம் நன்கு பொரிந்ததும் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு, காரத்திற்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி பாதி வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி தனியாகத்தூள், ஒரு தேக்கரண்டி சிக்கன் மசாலா, அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மிதமான தீயில் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.

அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நான்கு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மிளகு தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். முட்டையை நன்கு பொடிமாஸாக உதிரியாக வறுத்தெடுத்து கொள்ள வேண்டும்.

கிழங்கே இல்லாமல் அருமையான உருளைக்கிழங்கு மசாலா… சப்பாத்தி மற்றும் பூரிக்கு அசத்தலான சைட்ஷ்….

இப்பொழுது இந்த முட்டை பொடிமாஸ் வெங்காயம் தக்காளி வதக்கிய கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். முட்டையை தக்காளி மசாலாவுடன் சேர்த்து ஒரு சேர கிளற வேண்டும். இந்த நேரத்தில் கூடுதல் காரணம் தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி மிளகு சீரக தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக வடித்து ஆற வைத்திருக்கும் உதிரி ஆன வெள்ளை சாதத்தை சேர்த்து கிளற வேண்டும். கிளறும்பொழுது அரை தேக்கரண்டி எண்ணெய், பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி கிளறி இறக்கினால் சுவையான முட்டை சாதம் தயார். இந்த சாதத்தை சாப்பிடுவதற்கு சைடிஷ் எதுவும் தனியாக தேவைப்படாது அப்படியே வெறுமையாக சாப்பிட்டுவிடலாம்.

Exit mobile version