வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயங்களிலும் குழம்பிற்கு ஏற்ற சைடிஷ் செய்ய வேண்டும் எனும் சமயங்களிலும் நமக்கு பெரிதாக கை கொடுத்து உதவுவது முட்டை மட்டும் தான். இந்த முட்டை வைத்து விதவிதமாக பல ரெசிபிகள் செய்தாலும் ஒருபோதும் முட்டை சலித்து போவது இல்லை. இந்த முறை நான்கு முட்டை வைத்து அருமையாக காரசாரமான ரெசிபி செய்யலாம் வாங்க.. இந்த ரெசிபி சூடான சாதம் மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.
முட்டை பூண்டு காரம் செய்வதற்கு முதலில் மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, 10 பல் வெள்ளை பூண்டு, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். கூடுதலாக வாசத்திற்கு இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் நன்கு வதங்கிய பிறகு நான்கு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு நிமிடம் மிதமான தீயில் முட்டைகளை நன்கு பிரட்டி கொடுக்க வேண்டும்.
முட்டை ஒன்று இரண்டாக பொரிந்து வரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது முட்டையோடு சேர்த்து பூண்டு கரம் மசாலாவும் ஒரு சேர திரண்டு உதிரி உதிரியாக வந்துவிடும்.
இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முட்டை பூண்டு காரம் தயார். இந்த தொக்கு சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். மேலும் இதை சப்பாத்திக்கு சைடிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம்.