தீபாவளிக்கு செய்ய மறக்காதீங்க பாரம்பரிய இனிப்பு வகையான சுழியம்…!

சுழியம் ஒரு பாரம்பரியமான இனிப்பு வகையாகும். தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிரபலமாக உள்ள இந்த சுழியம் முக்கிய பண்டிகைகளின் போது வீடுகளில் செய்வது வழக்கம். பருப்பு, தேங்காய், வெல்லம் சேர்த்து பூரணம் செய்து அதை மைதா மாவு கரைசலில் தோய்த்து எண்ணெயில் பொறித்து எடுக்கப்படும் இந்த சுழியம் சுவை நிறைந்த ஒரு இனிப்பு வகையாகும். வாருங்கள் இந்த சுழியத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

செட்டிநாட்டு ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்… இந்த தீபாவளிக்கு இதை செய்து அசத்துங்கள்…!

சுழியம் செய்வதற்கு முதலில் 150 கிராம் கடலைப்பருப்பை குக்கரில் சேர்த்து கடலைப்பருப்பு வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது குக்கரை மூடி குக்கரின் விசிலை போட்டு மூன்றில் இருந்து நான்கு விசில் வரை விட்டு இந்த கடலைப்பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு 100 கிராம் அளவு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் தண்ணீரில் கரைந்த பின்னர் இதனை வடிகட்டி ஒரு கடாயில் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பாகு கம்பி பதம் வர வேண்டிய அவசியம் இல்லை. வெல்லம் சற்று கெட்டியானதும் இதனுடன் கால் டீஸ்பூன் சுக்கு தூள், கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு துருவி வைத்திருக்கும் கால் கப் அளவு தேங்காய் துருவலை சேர்த்து அதனை நன்கு கிளற வேண்டும். இப்பொழுது நாம் வேக வைத்து வைத்திருக்கும் பருப்பை சேர்த்து கிளறவும். அனைத்தும் சேர்ந்து நன்கு இறுகி கெட்டியாக வரும் வரை கிளற வேண்டும். கிளறிய பிறகு இதனை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு குளிர்சாதன பெட்டியில் 20 நிமிடங்கள் வரை வைத்து விடவும்.

இப்பொழுது வெளி மாவு தயார் செய்வதற்கு மற்றொரு கிண்ணத்தில் ஒன்றரை கப் அளவு மைதா மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு உப்பு, ஏலக்காய் தூள், சுக்கு பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மேசை கரண்டி அளவு நெய் சேர்த்து இதனை தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பஜ்ஜி மாவை விட கொஞ்சம் தண்ணீராக இருக்கும் படி கரைத்துக் கொள்ள வேண்டும். மாவை தயார் செய்த பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு சூடாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான சுழியம் தயாராகி விட்டது!

Exit mobile version