பிரைடு ரைஸ் சாப்பிட வேண்டும்… அதுவும் பாரம்பரியமான முறையில்.. ஒரு முறை நல்லம்பட்டி சிக்கன்ஃபிரைட் ரைஸ் ட்ரை பண்ணுங்க!

பிரைட் ரைஸ் என நினைத்தவுடன் நம் மனதில் தோன்றுவது ரோட்டு ஓரங்களில் மாலை நேரங்களில் கமகமக்கும் வாசனையோடு பரிமாறப்படும் ப்ரைட் ரைஸ் தான். அதைத் தொடர்ந்து பெரிய ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே சுவையான ப்ரைட் ரைஸ்கள் கிடைக்கும். ஆனால் இந்த முறை பாரம்பரியமான முறையில் வீட்டிலேயே சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாங்க நல்லம்பட்டி சிக்கன் பிரைடு ரைஸ் எளிமையாக செய்வதற்கான ரெசிபி இதோ.

முதலில் இரண்டு கப் பாஸ்பதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அந்த நேரத்தில் மற்றொரு அகலமான பாத்திரத்தில் நான்கு கப் அளவு தண்ணீர், இரண்டு பிரியாணி இலை, இரண்டு ஏலக்காய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதிக்க துவங்கியதும் 20 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை மீண்டும் ஒருமுறை கழுவி தண்ணீரில் சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்மதி அரிசியை குறைந்தது 7 முதல் 10 நிமிடம் வேக வைத்தால் போதுமானது. அதன் பிறகு தண்ணீர் வடிகட்டி ஒரு ஓரமாக வைத்துவிட வேண்டும்.

பாஸ்மதி அரிசியை வடிகட்டி எடுத்த பிறகு ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி சிறிது நேரம் நன்கு ஆறவிட வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 500 கிராம் சிக்கன், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதில் நாம் பாஸ்மதி அரிசி வடித்த தண்ணீரை ஒரு டம்ளர் அளவு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேக வைக்க வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடத்தில் சிக்கன் நன்கு வெந்துவிடும் அதன் பின்பு அடுப்பை அணைத்து விடலாம். சிக்கன் வெந்து இருப்பதை உறுதி செய்த பிறகு சிறு சிறு துண்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் பத்து காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு பெரிய கப் அளவிற்கு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிரட் வைத்து அருமையான மொறு மொறு மாலை நேர மெதுவடை! ரெசிபி இதோ!

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அதன் நடுவே இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது முட்டைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக்கொள்ள வேண்டும். முட்டை நன்கு வெந்த பிறகு நாம் வேகவைத்து உதிர்த்து வைத்திருக்கும் சிக்கனை கடாயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

சிக்கன் சேர்த்த ஒரு நிமிடம் கழித்து வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது அரை தேக்கரண்டி மிளகு சீரகத்தூள் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கினால் சுவையான நல்லம்பட்டி சிக்கன் பிரைடு ரைஸ் தயார்.

Exit mobile version