அசைவ உணவுகள் சாப்பிட முடியாத விசேஷ நாட்களில் அதே சுவையில் கொண்டைக்கடலை வைத்து அருமையான மசாலா ஒன்று தயார் செய்து பூரி, சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். மேலும் இந்த சென்னா மசாலா சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுதும் சுவை அருமையாக இருக்கும். காரசாரமான இந்த சென்னா மசாலா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..
இந்த மசாலா செய்வதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பாக கொண்டக்கடலையை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். எட்டு மணி நேரம் கழித்து ஊற வைத்திருக்கும் கொண்டக்கடலையை ஒரு குக்கருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இதில் வெள்ளைத் துணியில் ஒரு தேக்கரண்டி டீ தூள், ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு ஏலக்காய், கிராம்பு இரண்டு சேர்த்து ஒரு பொட்டணமாக கட்டி இதையும் குக்கருடன் சேர்த்து கொள்ளலாம். இப்பொழுது கொண்டைக்கடலை வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை முடிவிட வேண்டும்.
குறைந்தது நான்கு முதல் ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், இரண்டு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை மிக்ஸியில் அரைத்து விழுதுகளாக மாற்றி அதை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும்.
இந்த கிரேவிக்கு பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை பயன்படுத்தாமல் அரைத்து பயன்படுத்தும் பொழுது சுவை அருமையாக இருக்கும். தக்காளி பழத்தின் பச்சை வாசனை சென்றவுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி சென்னா மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம், பூண்டு சேர்க்காமல் 10 நிமிடத்தில் அருமையான தக்காளி சாதம்! லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ…
இந்த நேரத்தில் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். அடுத்ததாக நம் வேக வைத்திருக்கும் கொண்டக்கடலையை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வரை மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி இலைகளை தூவி கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.