இட்லி, தோசை மாவு இல்லாத நேரங்களில் ஒரு கப் அவல் போதும்… பத்தே நிமிடத்தில் அருமையான காலை உணவு தயார்!

பொதுவாக காலை நேரங்களில் இட்லி மற்றும் தோசை பெரும்பாலான வீடுகளில் உணவாக விரும்பி சாப்பிடுவது வழக்கம். சில நேரங்களில் இட்லி மாவு இல்லாத சமயங்களில் என்ன செய்வது என பெரிய குழப்பம் ஏற்படும். சுவையாக இருக்க வேண்டும் அதை சமயத்தில் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். அந்த நேரத்தில் ஒரு கப் சிவப்பு அவல் வைத்து அருமையான காலை ரெசிபி செய்யலாம் வாங்க. சிவப்பு அவல் வைத்து அருமையான கொழுக்கட்டை செய்வதற்கான ரெசிபி இதோ…

இந்த கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் ஒரு கப் சிவப்பு அவலை நன்கு கழுவி சுத்தம் செய்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து அவலில் இருந்து தண்ணீரை பிரித்து எடுத்து விடலாம். இப்பொழுது மீதம் இருக்கும் அவலில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் நான்கு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

மேலும் சுவைக்காக தேங்காயை பல்லு பல்லாக கீறி கடாயில் சேர்த்து ஒரு முறை வதக்கி இந்த தாளிப்பை நாம் அவளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த அவல் மாவுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளலாம். நாம் தாளிப்பின் போது கேரட் சேர்க்க விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். கேரட் சேர்ப்பது அவரவரின் விருப்பமே. கேரட் சேர்க்கும் பொழுது கொழுக்கட்டை சற்று நிறம் கூடுதலாக தெரியும்.
இப்பொழுது மாவு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். கொழுக்கட்டைக்கு மாவு தயாராக உள்ளது இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நம் கைக்கு பிடித்தமான விதத்தில் வடிவங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தண்ணீரை சூடு படுத்த வேண்டும். தண்ணீரிலிருந்து நன்கு கொதி வந்ததும் நாம் பிடித்து வைத்திருக்கும் அவல் கொழுக்கட்டை பிடிகளை தட்டில் ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி வேக வைக்க வேண்டும்.

இந்த கொழுக்கட்டையை மிதமான தீயில் குறைந்தது பத்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான அவல் கொழுக்கட்டை தயார். இந்த கொழுக்கட்டையை அப்படியே கூட சாப்பிட்டு விடலாம் தேவைப்பட்டால் காரமான தக்காளி சட்னி அல்லது சாஸ் வைத்து சாப்பிடலாம்.

Exit mobile version