அசைவ உணவில் மீனுக்கு தனி இடம் உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த இந்த மீன் உணவு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாகும். பல வகையான மீன்கள் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதில் இருந்தாலும் சில வீடுகளில் வெள்ளி, செவ்வாய் மேலும் விசேஷ நாட்களில் இந்த அசைவ உணவான மீனை சமைப்பதில்லை. அந்த நேரத்தில் மீனுக்கு பதிலாக இந்த சைவ மீன் குழம்பு வைத்து நம் குடும்பத்தினரை மகிழ்விக்கலாம். நாக்கில் எச்சில் ஊறும் சைவ மீன் குழம்பு ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 4
வத்தல் பொடி – 4 தேக்கரண்டி
மல்லி பொடி – 4 தேக்கரண்டி
சோம்பு பொடி – 3 தேக்கரண்டி
சீரகப்பொடி – 2 தேக்கரண்டி
மிளகுப்பொடி – 2 தேக்கரண்டி
புளி – எலுமிச்சை பழ அளவு
வெங்காயம் – 10 முதல் 15
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு – 10
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கடலை மாவு – 2 தேக்கரண்டி
கான்பிளவர் மாவு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – கைப்பிடி அளவு.
எலுமிச்சை பழ சாறு – 2 தேக்கரண்டி
செய்முறை
நாம் இந்த சைவ மீன் குழம்பு செய்வதற்கு மீனுக்கு பதிலாக வாழைக்காய் பயன்படுத்துகிறோம். அதனால் முதலில் வாழைக்காயை நன்கு கழுவி அதன் தோள்களை உரித்து நீளவாக்கில் நறுக்கி உப்புத் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை தேக்கரண்டி வத்தல் பொடி, ஒரு தேக்கரண்டி மல்லிப்பொடி, ஒரு தேக்கரண்டி சோம்பு பொடி, ஒரு தேக்கரண்டி சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, கடலை மாவு, கான்பிளார் மாவு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம். கெட்டியான பதத்திற்கு இந்த மசாலாக்களை கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் இந்த மசாலா கலவையை, தண்ணீரை வடித்து வாழைக்காயுடன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வாழைக்காயின் இருபுறமும் மசாலாக்கள் நன்கு படும்படி பொறுமையாக கலந்து கொள்ள வேண்டும். இப்படி தயார் செய்திருக்கும் வாழைக்காய் பஜ்ஜி பொறிப்பது போல் நன்கு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடேற்ற வேண்டும். அதில் தாளிப்பிற்காக கடுகு ,வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து பொரிய விட வேண்டும். அதன் பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதில் பச்சை மிளகாய், தக்காளிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம் .
தக்காளி நன்கு வதங்கியதும் அதில் கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை சேர்த்து வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். அதன் பின் புளி கரைசலை இதில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். மேலும் குழம்பு பதத்திற்கு வரும் அளவிற்கு தண்ணீரையும் சேர்த்து விடலாம். இந்த குழம்பை 15 நிமிடங்கள் மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்த பிறகு நாம் பொரித்து வைத்திருக்கும் வாழைக்காய் அதை சேர்த்து மீண்டும் ஒரு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இப்பொழுது அடுப்பை அணைத்து மல்லி இலைகள் தூவினால் நமக்கு சைவ மீன் குழம்பு தயார். இந்த மீன் குழம்பு வெள்ளி செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் நம் வீடுகளில் வைத்து சுவையான மீன் குழம்பு ருசியில் சைவம் மீன் குழம்பு உண்டு மகிழலாம்.