விசேஷ நாட்களில் வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா!  அப்போ கருப்பட்டி, தினை வைத்து பொங்கல் செய்யலாம் வாங்க…

விசேஷ நாட்கள் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது இனிப்புதான். இனிப்பு இல்லாமல் எந்த நல்ல செயல்களும் தொடங்குவது இல்லை. அந்த இனிப்பு உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக அமைந்தால் அந்த விசேஷ நாள் மேலும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இன்று கருப்பட்டி மற்றும் சிறுதானிய வகையான தினை வைத்து ஒரு இனிப்பு பொங்கல் செய்யலாம் வாங்க….

தேவையான பொருட்கள்

தினை அரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – கால் கப்
பால் – ஒரு கப்
கருப்பட்டி – முக்கால் கப்
ஏலக்காய் தூள்- இரண்டு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம்- 10
தண்ணீர் – 2 கப்
ஜாதிக்காய் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு கடாயில் அரை கப் தினை அரிசியை நன்கு வாசனை வரும்படி வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் பாசிப்பருப்பையும் அதேபோல் வாசனை வரும்படி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பால் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பால் பொங்கி வரும் நேரத்தில் நாம் பார்த்து வைத்திருக்கும் தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளலாம். இதை 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் வேகவைத்தால் போதுமானது.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை கடையல்!

தினை அரிசியும் பாசிப்பருப்பும் வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் கருப்பட்டிகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்ச்ச வேண்டும். கருப்பட்டி கரைந்து தண்ணியாக இருந்தால் போதும் கம்பி பதம் தேவையில்லை. இந்த கலவையை திணை அரிசியினுள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு மூன்று முறை கிளறி கொடுக்க வேண்டும். அதன் பின் இதில் ஜாதிக்காய் தூள், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு முறை கிளறி கொடுத்து அடுப்பை அனைத்து விட வேண்டும். இந்த பொங்கலுக்கு மேலும் சுவை தரும் வகையில் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாமை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக 15 நிமிடத்தில் சத்து நிறைந்த தினை அரிசி கருப்பட்டி பொங்கல் தயார்.

Exit mobile version