வயிற்றுப்புண், மூலம், குடல் புண் இவற்றிற்கு வாழைப்பூ ஒரு அருமருந்தாக உள்ளது. பல சத்துக்கள் கொண்ட வாழைப்பூ நம் வீட்டில் வாரத்திற்கு இருமுறையாவது நாம் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் வாழைப்பூவை துவரமாகவோ, கூட்டாகவோ வைத்து சாப்பிட பிடிக்காது. அந்த நேரங்களில் வாழைப்பூவை வைத்து சுவையான துவையல் ஒன்று செய்து பாருங்கள்.வாழைப்பூ துவையல் செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ.
வாழைப்பூ துவையல் செய்வதற்கு இரண்டு கைப்பிடி அளவு வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் அல்லது மோருடன் சேர்த்து ஓரமாக வைத்து விடவும். மோரில் வாழைப்பூவை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளும் பொழுது வாழைப்பூ நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எள் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் நான்கு காய்ந்த வத்தலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். மீதம் இருக்கும் அதே எண்ணெயில் இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பை தனியாக எடுத்து வைத்து விடவும். அதே கடாயில் பாதி எலுமிச்சை பழ அளவு புளியை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் புளியையும் தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் எண்ணையில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் வாழைப்பூவை சேர்த்து வதக்க வேண்டும்.
வாழைப்பூ வதக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு வதக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வாழைப்பூவை கடாயில் நன்கு வதக்கும் பொழுது வாழைப்பூ நன்கு வெந்துவிடும்.
ஹோட்டல் ஸ்டைல் மிளகு நண்டு பிரட்டல்! காரசாரமான ரெசிபி இதோ!
அதன் பின் நாம் வதக்கிய வாழைப்பூ, புளி, வத்தல் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதன் பின் நாம் வறுத்து வைத்திருக்கும் எல், உளுந்தம் பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வாழைப்பூ துவையல் தயார்.
துவையலுக்கு எண்ணெய் , கடுகு, கருவேப்பிலை, கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கிளறினால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.