கருப்பு உளுந்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்தக் கருப்பு உளுந்தை நாம் தொலி நீக்காமல் அப்படியே சாப்பிட்டு வரும்பொழுது அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும். இந்த கருப்பு உளுந்து பொதுவாக முதுகெலும்பு மற்றும் அனைத்து மூட்டு எலும்புகளையும் வலுப்படுத்தும் சக்தி கொண்டது. இத்தனை சிறப்பு மிக்க கருப்பு உளுந்து வைத்து இனிப்பு கஞ்சி செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – அரை கப்
நாட்டு சக்கரை அல்லது கருப்பட்டி – அரை கப்
தேங்காய் பால் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – இரண்டு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை
துருவிய தேங்காய் – அரை கப்
தண்ணீர் – இரண்டு கப்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் கருப்பு உளுந்து சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த உளுந்தை சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதை கடாயில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு சூடானதும் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் கருப்பு உளுந்து பொடியை சேர்க்க வேண்டும். மாவை மொத்தமாக சேர்க்கக்கூடாது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும் இல்லை என்றால் மாவு கட்டியாக மாறிவிடும்.
மாவு சேர்த்த பின் மாவை இடைவிடாமல் 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி கொடுக்க வேண்டும். உளுந்தம் மாவு வெந்ததும் அதில் கருப்பட்டியை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் சிறிதளவு ஏலக்காய் தூள், சுக்குத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக நம் துருவி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.
இப்பொழுது நமக்கு சுவையான கருப்பு உளுந்து தேங்காய்ப்பால் கருப்பட்டி கஞ்சி ரெடி. இந்த கஞ்சியை வாரத்தில் ஒரு முறையாவது நாம் தொடர்ந்து குடித்து வரும் பொழுது நம் முதுகெலும்புகள் பலப்பட்டு ஆரோக்கியமாக மாற முடியும்.