பூரி சாப்பிட ஆசையா… புதுவிதமான ராஜஸ்தான் ஸ்டைல்  ரவா பூரி ட்ரை பண்ணுங்க! 

பூரி பிடிக்காத குழந்தைகள் இருக்கவே முடியாது. இந்த பூரி குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று. வாரத்தில் ஒரு முறையாவது நாம் நம் வீடுகளில் பூரி செய்வதை வழக்கமாக வைத்துள்ளோம். அந்த வகையில் எப்பொழுதும் போல எளிமையான முறையில் இல்லாமல் ராஜஸ்தான் ஸ்டைலில் சிறப்பாக பூரி செய்து நம் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க…..

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப்
கோதுமை மாவு – இரண்டு கப்
உருளைக்கிழங்கு – 2 வேகவைத்து மசித்து கொள்ளவும்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
மல்லி இலை – கைப்பிடி அளவு
சில்லி ஃபிளக்ஸ் – ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே பதப்படுத்த வேண்டும். ரவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதுமானது. 15 நிமிடங்கள் கழித்து அந்த ரவையுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவு, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, சில்லி ஃபிளக்ஸ், சீரகத்தூள், உப்பு, மல்லி இலை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் உருளைக்கிழங்குகளை நன்கு வேக வைத்து மசித்துக் கொண்டால் மட்டுமே பூரி உப்பலாக வரும். இல்லை என்றால் அப்பளம் போல சரியான பதத்திற்கு வராது. நாம் கலந்து வைத்திருக்கும் மாவை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து அதன் பின் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

சிறு சிறு உருண்டைகளாக இல்லாமல் சற்று பொதுவான அளவு உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். உருண்டைகளை வட்டமாக தேய்க்கும் பொழுதும் சற்று மந்தமாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும் இந்த பூரியை போட்டு எடுக்கவும்.

மேலும் இந்த பூரி செய்யும் பொழுது அதற்கு தனியாக எந்த சைடு டிஷ்ஷும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த பூமியில் காரம் மற்றும் உப்பு நிறைந்து இருப்பதால் வெறும் வாயிலே சாப்பிட்டுவிடலாம் தேவைப்பட்டால் உருளைக்கிழங்கு மசாலா அல்லது வெங்காயம் தயிர் ரைத்தா கூட வைத்து சாப்பிடலாம்.

Exit mobile version