புரோட்டின் சத்து தாராளமாக கொண்டுள்ள சோயா வைத்து அருமையான தொக்கு ரெசிபி!

வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் என அனைவருக்கும் புரோட்டின் சத்து முக்கியமானது. இந்த புரோட்டின் சத்து அதிகமாக உள்ள சோயா வைத்து வித்தியாசமான முறையில் தொக்கு செய்யலாம் வாங்க. இந்த சோயா தொக்கு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

முதலில் ஒரு கப் சோயாவை நன்கு சுடுதண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். சோயாவை ஊறவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், பட்டை ஒன்று, பிரியாணி இலை ஒன்று, லவங்கம் 2 சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய் பாதி வதங்கியதும் ஒரு ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து மசாலாக்களின் வாசனை செல்லும் வரை வதக்கவும்.

ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து நன்கு பழுத்த பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் வதங்கும் நேரத்தில் நம் ஊற வைத்திருக்கும் சோயாவை நன்கு தண்ணீர் பிழிந்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

நம் வீட்டு சாம்பார் வாசனையில் ஊரே மணக்க வேண்டுமா? சாம்பார் பொடி செய்வதற்கான ரெசிபி இதோ!

அரைத்த இந்த விழுதுகள் மற்றும் கைப்பிடி அளவு பச்சை பட்டாணி இரண்டையும் தக்காளி நன்கு வதங்கியதும் சேர்த்து வதக்க வேண்டும். இந்த நேரத்தில் அரை டம்ளர் அளவு தண்ணீர், இந்த தொக்கிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

தொடர்ந்து ஐந்து நிமிடம் கொதிக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து கலந்து கொடுத்து மீண்டும் ஒரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி பட்டாணி வெந்துள்ளதா என பார்த்துவிட்டு அடுப்பை அணைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சோயா தொக்கு தயார். இந்த தொக்கு சூடான சாதம் மற்றும் சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version