தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு கார மசாலா!

சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு உருளைக்கிழங்கு சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு மசாலாவை எப்பொழுதும் போல அல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து செய்தால் சுவை மேலும் சிறப்பாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு கார மசாலா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

இந்த முறை உருளைக்கிழங்கு கார மசாலா செய்வதற்கு நாம் பேபி உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்து பார்க்கலாம். இதற்கு அரை கிலோ வரை பேபி உருளைக்கிழங்கை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரின் அழுத்தம் குறைந்தபின் வேக வைத்த உருளைக்கிழங்கை தனியாக எடுத்து அதன் தோள்களை நீக்கி சுத்தம் செய்து ஒரு கட்டிற்கு மாற்றி வைத்து விடவும்.

இப்பொழுது மசாலா தயாரித்துக் கொள்ளலாம். ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் நான்கு வத்தல், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு!

வறுத்த இந்த பொருட்களின் சூடு குறைந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பொடி செய்து கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

கடுகு நன்கு பொரிந்ததும் கொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணையுடன் நன்கு வதக்க வேண்டும்.

இப்பொழுது இந்த கலவையுடன் நாம் வேக வைத்திருக்கும் பேபி உருளைக்கிழங்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக நாம் வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை உருளைக்கிழங்குடன் சேர்த்து மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கிளற வேண்டும்.

இப்பொழுது சுவையான மற்றும் காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல் தயார். இந்த உருளைக்கிழங்கு மசாலாவை அனைத்து வகையான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அசத்தலாக இருக்கும்.

Exit mobile version