ஐந்தே நிமிடத்தில் குழம்பு சமைக்க வேண்டுமா? வாங்க கேரளா ஸ்டைல் தக்காளி மோர் குழம்பு ட்ரை பண்ணலாம்!

மதிய வேலைகளுக்கு சாதம் செய்வது எளிமையான முறை தான் ஆனால் அதற்கு எந்த குழம்பு செய்ய வேண்டும் தான் ஒரு குழப்பம். தினமும் விதவிதமான குழம்பு வகைகளை வைத்து அசத்தினாலும் இந்த வெயிலுக்கு இதமாக மோர் வைத்து தக்காளி மோர் குழம்பு செய்யலாம் வாங்க.

முதலில் தக்காளி மோர் குழம்பு செய்வதற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். நன்கு பொறிந்ததும் இரண்டு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இந்த குழம்பு செய்யும் பொழுது சின்ன வெங்காயத்தை பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும்.

அதற்கு ஏற்ப 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பொடியாக நறுக்கிய நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழத்தை சற்று கூடுதலாகவே சேர்த்துக் கொள்ளலாம் அப்பொழுதுதான் புளிப்பு சுவையுடன் குழம்பு அருமையாக இருக்கும்.

தக்காளி பழம் நன்கு வதங்கியதும் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து இந்த மசாலாவை கொதிக்க விட வேண்டும். மசாலாக்கள் நன்கு கொதித்து வாசனை வரும் நேரத்தில் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கப் கெட்டியான தயிர் அதில் சேர்க்க வேண்டும்.

நம் வீட்டு சமையல் அறையில் ராணியாக மாற இல்லத்தரசிகளுக்கு எளிமையான 10 சமையல் டிப்ஸ்!

தயிர் சேர்த்து நன்கு மசாலாக்களுடன் கலந்து இறுதியாக மல்லி இலைகள் தூவி இறக்கினால் கேரளா ஸ்டைல் தக்காளி மோர் குழம்பு தயார். விருப்பப்பட்டால் இந்த மோர் குழம்பில் பக்கோடா சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.

Exit mobile version