பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் இட்லி, தோசை சாப்பிடுவது வழக்கம். அதற்கு எப்பொழுதும் போல வீட்டில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து சலித்து விட்டதா… சற்று வித்தியாசமான முறையில் அட்டகாசமான இரண்டு புது விதமான சட்னி ட்ரை பண்ணலாம் வாங்க….
ரோட்டு கடை தண்ணீர் சட்னி.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஆறு பல் வெள்ளை பூண்டு, நான்கு பச்சை மிளகாய், சிறிய எலுமிச்சை பழ அளவு புளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதுமானது பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை.
வதக்கி எந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரை கப் வேர்க்கடலை, அரைக்கப் பொரிகடலை , அரை தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது சட்னி தயார். இதில் தாராளமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த சட்னி தண்ணியாக இருக்கும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.
வறுத்த வெங்காய சட்னி
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் லேசான பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இதனுடன் சிறிய எலுமிச்சை பழ அளவு புளி சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களின் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது வருத்த தேங்காய் சட்னி தயார்.
இந்த இரண்டு சட்னிக்கும் பொதுவாக எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளலாம். ஹோட்டலில் சாப்பிடுவது போல இரண்டு சட்னியின் சுவையும் தனித்துவமாக அருமையாக இருக்கும்.