சுலபமா செய்யலாம் கிராமத்து சுவையில் காரசாரமான நண்டு குழம்பு…!

நண்டு பெரும்பாலானவருக்கு பிடித்தமான ஒரு கடல் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை நண்டு விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த நண்டை சமைப்பது கடினம் என்று நினைத்து சிலர் வீடுகளில் முயற்சிக்க மாட்டார்கள். உண்மையிலேயே நண்டு சமைப்பது மிக மிக சுலபம். நண்டு வேக எடுத்துக் கொள்ளும் நேரமும் மிகக் குறைவு. எனவே இந்த நண்டை நாம் எளிமையாக வீட்டில் சமைக்கலாம். இப்பொழுது கிராமத்து சுவையில் எப்படி நண்டு குழம்பை காரசாரமாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முதலில் அரை கிலோ அளவு நண்டை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். சோம்பு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை ஒன்றரை கப் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதக்கும் பொழுது உப்பு சேர்த்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரம் வதங்கிவிடும். வெங்காயம் வதங்கிய பிறகு இதனுடன் இரண்டு பழுத்த தக்காளிகளை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் அளவு தேங்காய் பூ சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு, ஒன்றரை ஸ்பூன் மிளகு, 5 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நாம் வதக்கிய வெங்காயம் தக்காளியோடு தேவையான அளவு உப்பு சேர்த்து இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாக்கள் வதங்கி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து இதில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

இது நன்கு கொதித்த பிறகு இதில் அரைத்த மசாலாவை ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டை அதில் சேர்க்க வேண்டும். நண்டு ஆறு நிமிடத்தில் வெந்து விடும். நண்டு நன்கு வெந்து குழம்பு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம்.

இந்த நண்டு ரசத்தை வைத்து ஒரு முறை குடித்துப் பாருங்கள்! சளி, இருமல் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்…!

அவ்வளவுதான் கிராமத்து சுவையில் அட்டகாசமான நண்டு குழம்பு தயார்!

Exit mobile version