அனைவருக்கும் பிடித்தமான வேர்க்கடலை குழம்பு! இதுபோல செய்து பாருங்கள்…!

வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்தமான உணவுப் பொருளாகும். இதை வறுத்து, அவித்து என பல்வேறு விதமாக சாப்பிடலாம். மேலும் இந்த வேர்க்கடலை வைத்து சட்னி, குழம்பு என பலவகையான ரெசிபிக்களும் செய்யலாம். இந்த வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஏழைகளின் பாதாம் என்று அழைக்கக்கூடிய இந்த வேர்க்கடலை வைத்து எப்படி சுவையான வேர்க்கடலை குழம்பு செய்யலாம் என்பதை பாருங்கள்.

கிராமத்து சுவையில் அட்டகாசமான நெத்திலி மீன் குழம்பு… இப்படி செய்து பாருங்கள்…!

வேர்க்கடலை குழம்பு செய்வதற்கு ஒரு கப் அளவு வேர்க்கடலையை மிதமான சூட்டில் வைத்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி வறுத்த பிறகு அதிலுள்ள தோலை நீக்கி அதனை ஒரு குக்கரில் சேர்க்கவும். தோல் நீக்கிய வேர்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக வைக்க வேண்டும். குக்கர் மூன்றில் இருந்து நான்கு விசில் வந்ததும் இதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவு தேங்காய் துருவல் சேர்க்கவும். இதனுடன் இரண்டு சிறிய துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், 2 கிராம்பு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கால் ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து கொள்ள வேண்டும். இவை பொரிந்ததும் இரண்டு பெரிய வெங்காயங்களை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் வந்து ஒரு மேஜை கரண்டி அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சிறிதளவு கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதற்கான மசாலாக்களை சேர்க்கலாம். கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, 2 டீஸ்பூன் மல்லித்தூள், ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். இவற்றின் பச்சை வாசனை போனதும் நன்கு பழுத்த ஒரு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அதையும் வதக்கிக் கொள்ள வேண்டும்.

இதில் சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு சில நிமிடங்கள் வேக விடவும். தக்காளி வெங்காயம் வதங்கி மென்மையானதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும். பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்து வைத்திருக்கும் கடலையை சேர்க்கவும். கடலையை வேக வைத்த தண்ணீரோடு சேர்த்துக் கொள்ளலாம். இந்த நிலையில் உப்பை சரி பார்த்துக் கொள்ளவும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் குழம்பை மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் அருமையான வேர்கடலை குழம்பு தயார்!

Exit mobile version