நாண் இந்தியா மற்றும் சில ஆசிய பகுதிகளில் பிரபலமான உணவாகும். பெரும்பாலும் இந்த நாணை நாம் ஹோட்டல்களில் சுவைத்திருப்போம். இதை சாப்பிட ஹோட்டல்களுக்கு மட்டும்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாண் சப்பாத்தி, ரொட்டி போல வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிமையான உணவு தான். ஆனால் சப்பாத்தி, ரொட்டி போல தவாவில் சமைக்காமல் நேரடியாக அடுப்பில் காட்டி சமைப்பதால் இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
அட்டகாசமான பட்டர் சிக்கன்… நீங்கள் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்யலாம்!!
நாண் செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவு மைதா மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா எடுத்து கலந்து கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி அளவு உருக்கிய நெய் மற்றும் ஒரு மேஜை கரண்டி தயிர் ஆகியவற்றை சேர்ந்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது கலந்து வைத்த மாவுடன் கை பொறுக்கும் சூட்டில் சுடுதண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு போல இதனை நன்கு பிசைந்த பிறகு ஒரு துணியால் மூடி ஒன்றரை மணி முதல் 2 மணி நேரம் வரை அப்படியே வைத்து விட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திறந்து பார்த்தால் மாவு நன்கு உப்பி இருக்கும். மாவு மிக மென்மையாக மாறி இருக்கும்.
இப்பொழுது இந்த மாவில் ஒரு சிறு பகுதியை எடுத்து நன்கு உருட்டிக் கொள்ளவும் இதனை சப்பாத்தி போல மிக மெல்லியதாக தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் தடிமனாக தேய்த்துக் கொள்ளலாம் இதன் மீது வெண்ணை தடவி கொள்ளவும். இது சாதாரண நாண்.
மற்றொரு உருண்டையை இதே போல் தேய்த்து அதன் மீது கருப்பு எள்ளை தூவி மென்மையாக அழுத்தி தேய்க்கவும். இது கருப்பு எள் நாண் செய்வதற்கான முறை.
மற்றொரு உருண்டையை இதே போல தேய்த்து அதனுடன் ஒரு சிறிய கிண்ணத்தில் வெண்ணெய், துருவிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து இந்த நாணின் மீது தடவிக் கொள்ளவும். சிறிதளவு கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி இதன் மீது தூவி மென்மையாக அழுத்தி தேய்த்து விடவும்.
இப்பொழுது சாதாரண நாண், கருப்பு எள்ளு நாண், பூண்டு நாண் மூன்றும் செய்ய தயாராகி விட்டது. இப்பொழுது இந்த நாணை ஒவ்வொன்றாக எடுத்து தோசை கல்லில் இருபுறமும் லேசாக போட்டு எடுக்கவும். பிறகு இதனை அடுப்பில் wire rack வைத்து நிறம் மாறும் வரை சுட்டு இருபுறமும் திருப்பி நன்கு வேக விட்டு எடுக்கவும்.
சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமான வெஜிடபிள் குருமா…!
அவ்வளவுதான் சுவையான மூன்று விதமான நாண் தயாராகி விடும் இதனோடு பட்டர் சிக்கன், பன்னீர் பட்டர் மசாலா மிக பொருத்தமாக அட்டகாசமாக இருக்கும்.