கோவில்களில் செய்யும் பிரசாதங்களில் ஒன்று தயிர் சாதம். இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு பிரசாதமாகும். உடலுக்கு குளுமை தந்து உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியது தயிர் சாதம். பலரும் தயிர் சாதம் தானே என்று சாதாரணமாக நினைக்கலாம். ஆனால் தயிர் சாதத்தில் பாலும் தயிரும் கலக்கும் வீதமும், தாளிப்பின் பக்குவமும் சரியாக இருந்தால் தான் தயிர் சாதம் நன்றாக இருக்கும். தயிர் அதிக புளிப்பாகவும் இருக்கக் கூடாது அதேபோல் சரியாக புளிக்காமல் இருந்தாலும் நன்றாக இருக்காது. சரியான பக்குவத்தில் கோவில் சுவையில் எப்படி தயிர்சாதம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தயிர் சாதம் செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு பச்சரிசியை எடுத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். இரு முறை நன்கு அலசிய பிறகு இதனை சாதமாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதம் நன்கு குழைய வடித்துக் கொள்ள வேண்டும். வடித்த இந்த சாதத்தை ஒரு கரண்டி கொண்டு நன்கு மசித்து கொள்ளவும். சாதத்தை நன்கு மசித்த பிறகு இதில் அரை லிட்டர் அளவு காய்ச்சிய பாலை ஆறவைத்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் பாலை சேர்த்து நன்கு கிளறவும்.
பாலையும் சாதத்தையும் கிளறிய பிறகு கால் லிட்டர் அளவு தயிர் சேர்த்து மீண்டும் கிளர வேண்டும். சாதம் இன்னும் தளர வேண்டும் என்றால் பால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது 50 கிராம் அளவு வெண்ணெய் சேர்த்து கொண்டு கிளறவும். ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இப்பொழுது இதில் பொடியாக நறுக்கிய 4 பச்சை மிளகாய் மற்றும் இரண்டு துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். இப்பொழுது ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் 2 ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதனை சாதத்தில் மேல் கொட்டிக் கொள்ளவும். இரண்டு கைப்பிடி அளவு மாதுளம் பழ முத்துக்கள் மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறலாம்.
அவ்வளவுதான் சுவையான தயிர் சாதம் கோவில் பிரசாதம் சுவையில் அட்டகாசமாக தயாராகி விட்டது!