காய்களிலேயே மிகச் சிறிய காயான சுண்டைக்காயில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சுண்டைக்காய் வைத்து நாம் பலவிதமான ரெசிபிகளை செய்ய முடியும். சுண்டைக்காய் வைத்து சுவையான சுண்டைக்காய் கெட்டி குழம்பு செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தினமும் என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிப்பவர்கள் வித்தியாசமாக இந்த சுண்டைக்காயை வைத்து இப்படி கெட்டி குழம்பு செய்து பாருங்கள். நீங்கள் வடித்த சாதத்தில் கொஞ்சமும் மிச்சம் இருக்காது.
காரைக்குடி ஸ்டைலில் சுவையான சுண்டைக்காய் பச்சடி!
சுண்டைக்காய் கெட்டி குழம்பு செய்வதற்கு 10 பல் பூண்டு மற்றும் 100 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். 150 கிராம் அளவு சுண்டக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். 200 கிராம் அளவு தக்காளியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் காயவைத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு ஆகியவற்றை போட்டு பொரிக்கவும். இவை நன்கு பொரிந்ததும் 7 பல் பூண்டு மற்றும் ஒரு கப் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். ஒரு துண்டு இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். இதில் 100 கிராம் அளவு சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் வதங்கி நிறம் மாறி வெள்ளையாக வரும் பொழுது ஒரு மேஜை கரண்டி அளவு துருவிய தேங்காய் மற்றும் 10 முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இறுதியாக இரண்டு பழுத்த தக்காளியையும் சேர்த்து வதக்கி இதனை ஆற விட வேண்டும். இவை நன்கு ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அதே கடாயில் மூன்று மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொள்ளவும். இதில் நாம் ஏற்கனவே உரித்து வைத்திருக்கும் 10 பல் பூண்டு, 100 கிராம் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கும் பொழுதே நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் 150 கிராம் சுண்டைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். சுண்டக்காய் நிறம் மாறியதும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நான்கு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இந்த நிலையில் நாம் ஏற்கனவே மிக்சியில் அரைத்த மசாலாவையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு சிறிதளவு புளியை கரைத்து ஊற்றி மூடி கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடலாம். இந்த குழம்பு தண்ணீராக இருக்கக் கூடாது சட்னி போல கெட்டியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுண்டைக்காய் கெட்டி குழம்பு தயார்!