சாம்பார் சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்… செய்த சாதம் கொஞ்சம் கூட மிஞ்சாது!

சாம்பார் சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு அருமையான உணவு என்று சொல்லலாம். நெய், காய்கறிகள், பருப்பு என உடலுக்கு நன்மை தரக்கூடிய அனைத்து பொருட்களும் சேர்த்து இந்த சாம்பார் சாதத்தை நாம் செய்கிறோம். கடைகளில் பிரத்தியேகமாக சாம்பார் பொடி என்று விற்றாலும் இதில் நாம் பயன்படுத்துவது கடைகளில் விற்கப்படும் பொடியை அல்ல. சாம்பார் சாதத்திற்கு என்று பிரத்தியேகமாக நாமே வீட்டில் வறுத்து அரைத்த தேங்காய் மற்றும் வறுத்து அரைத்த மசாலாக்களை சேர்ப்பதால் இதன் சுவை மிகவும் அலாதியாக இருக்கும். இதில் இந்த காய்கறிகளை மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை உங்களுக்கு விருப்பமான எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சாம்பார் சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

உங்க குழந்தைங்க லஞ்ச் பாக்ஸுக்கு தக்காளி சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

முதலில் சாம்பார் சாதத்திற்கு தேவையான மசாலாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஆறு வர மிளகாய் வறுக்கவும் அதனோடு இரண்டு மேசை கரண்டி வர கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் மிளகு, 1½ ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் வறுத்தபின் ஆறவைத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி தனியாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் ஆறிய பின்பு அதனையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு குக்கரில் ஒரு ஆழாக்கு பொன்னி பச்சரிசியை கழுவி சேர்த்து மூன்று டம்ளர் தண்ணீர் விட வேண்டும். இதனை இரண்டு விசில் வைத்து எடுக்க வேண்டும். பின்பு ஒரு ஆழாக்கு துவரம் பருப்பு மற்றும் ஒரு பிடி அளவு பாசிப்பருப்பை சேர்த்து அதனோடு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக விட வேண்டும். இவை இரண்டும் வெந்ததும் இதனை தனியாக வைத்துவிடவும்.

இப்பொழுது குக்கரில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து 100 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இரண்டு கேரட், 10 பீன்ஸ், இரண்டு நன்கு பழுத்த தக்காளி, முருங்கைக்காய் என விரும்பிய அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு மஞ்சள் தூள் சேர்த்து நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வரும் வரை வைக்க வேண்டும்.

குக்கரை திறந்தபின் வறுத்து அரைத்து பொடி செய்த மசாலாவில் 5 ஸ்பூன் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதன்பின் வேகவைத்த சாதம் மற்றும் பருப்பை சேர்த்து கிளற வேண்டும். இதனை குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். சாதம் நன்கு குழைந்து வர வேண்டும்.

நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையைக் கொண்டு ஊரே மணக்கும் கறிவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்கள்!

இப்பொழுது ஒரு சிறிய கடாயில் 4 ஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சாம்பார் சாதத்தோடு சேர்க்கவும். இறுதியாக வறுத்து அரைத்த தேங்காய் பூவும், கொஞ்சம் வறுத்த பொடியும் சாம்பார் சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலையை தூவி மூடி விடவும்.

அவ்வளவுதான் சுவையான சாம்பார் சாதம் தயாராகிவிடும்!

Exit mobile version