உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் குழந்தைகளுக்கு அருமையான மாலை நேர சிற்றுண்டி ஆகும். பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஆவலோடு அம்மா இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் என்று தான் முதலில் கேட்பார்கள். அவர்களுக்கு வழக்கமாய் கொடுப்பதை விட ஏதேனும் வித்தியாசமான ஒரு ஸ்நாக்ஸை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு தாராளமாக இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் முயற்சி செய்து பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறியான உருளைக்கிழங்கோடு சீஸ் சேர்த்து செய்வதால் மிக சுவையாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எளிமையாக எப்படி செய்வது என பார்ப்போம்.
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயாரிக்கும் முறை:
உருளைக்கிழங்கை ஒரு 400 கிராம் அளவிற்கு எடுத்து வேகவைத்து தோல்களை உரிக்க வேண்டும். தோலை உரித்த பின்னர் உருளைக்கிழங்குகளை மசித்து வைத்துக் கொள்ளவும். ஐந்து க்யூப்ஸ் சீஸினை எடுத்து துருவி வைத்துக்கொள்ள வேண்டும். நான்கு பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் இரண்டு மேஜை கரண்டி எண்ணெய் காய வைத்து சிறிதளவு பட்டை, கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலை ஆகியவற்றை தாளிக்கவும். இதனுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாயை போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சிறிதளவு உப்பு சேர்க்கவும். பின் மசித்து வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளற வேண்டும். துருவி வைத்த சீசையும் சேர்த்து கிளறி விடவும்.
கொத்தமல்லி தலையை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து கிளறவும். அனைத்தையும் கிளறிய பின்பு அடுப்பை அணைத்து சிறிது நேரம் இதனை ஆற விடவும்.
நன்கு ஆறிய பின் இந்த மாவினை ஒரு சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். இரண்டு மேஜை கரண்டி கான்பிளவர் மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் 200 கிராம் பிரட் கிரம்சை எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது உருட்டி வைத்த உருண்டைகளை கரைத்த மாவில் நனைத்து பின் பிரட் கிரம்சில் பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து தயார் செய்த உருண்டைகளை நான்கு அல்லது ஐந்து உருண்டைகளாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
அடுப்பை குறைவான தீயில் வைத்து உருண்டைகளை போட்டு சற்று வெந்தவுடன் மெதுவாய் திருப்பி உடையாமல் வேக வைக்கவும்.
இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்சை சுடச்சுட சாஸ் சேர்த்து பரிமாறலாம்…!