சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த நெஞ்செலும்பு சூப்…! இனி ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்யலாம்…

மட்டன் நெஞ்செலும்பு சூப் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு வகையாகும். பிரசிவித்த பெண்களுக்கு மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு உடல் சீக்கிரம் குணமாக இந்த நெஞ்செலும்பு சூப்பினை அடிக்கடி செய்து கொடுப்பார்கள். இந்த நெஞ்செலும்பு சூப் அடிக்கடி பருகுவதால் உடல் வலுப்பெறும் மேலும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபட முடியும்.

தொண்டைக்கு இதமான இந்த சூப்பினை பருகினால் பல ஊட்டச்சத்துக்களையும் நாம் பெற முடியும். இதில் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்து இருக்கிறது நெஞ்செலும்பு சூப் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற உதவி புரிகிறது. நெஞ்செலும்பினை நீண்ட நேரம் வேகவைப்பதால் அதில் உள்ள சாறுகள் இறங்கி அரைத்து சேர்த்த மசாலாக்களோடு இணைந்து இது கூடுதல் சுவையாக இருக்கும். இதை செய்வது மிக கடினம் அல்ல எளிமையாக பிரஷர் குக்கரில் செய்துவிடலாம்.

மட்டன் நெஞ்செலும்பு சூப் தயாரிக்கும் முறை:

கால் கிலோ மட்டனை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் 2 ஸ்பூன் முழு மல்லி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் இதுதான் நெஞ்செலும்பு சூப்பிற்கு தேவையான மசாலா.

இப்பொழுது ஒரு பிரஷர் குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி 3 கிராம்பு, இரண்டு பட்டை துண்டுகள், இரண்டு பிரியாணி இலை, இரண்டு ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

12 சின்ன வெங்காயம் மற்றும் ஆறு பல் பூண்டினை தட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும். 2 பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது மட்டன் நெஞ்செலும்பை சேர்த்து நன்கு வதக்கவும். நெஞ்செலும்பை வதக்கிய பின்பு அரைத்த மசாலாக்களை சேர்க்கவும். பின் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்க்கவும்.

குக்கரில் ஒரு அரை மணி நேரம் வைக்கவும். குறைந்தது 10 விசில் விட வேண்டும். விசில் வந்த பிறகு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் வீடே மணக்கும் நெஞ்செலும்பு சூப் தயாராகி இருக்கும்.

இறுதியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை இலை தூவி இறக்கி விடலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் கூடுதலாக மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் காரசாரமான நெஞ்செலும்பு சூப் தயார்!

Exit mobile version