சத்தான முருங்கைக்கீரை வைத்து இப்படி குழம்பு செய்து பாருங்கள்… ஆரோக்கியமான முருங்கைக் கீரை குழம்பு!

முருங்கைக் கீரை சத்துக்கள் நிறைந்த ஒரு கீரை வகையாகும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த முருங்கைக்கீரை வைத்து பல ரெசிபிகளை நாம் செய்ய முடியும். பொரியல், கடையல், சாம்பார், அடை என முருங்கைக்கீரை கொண்டு நாம் செய்யும் ரெசிப்பிகள் சுவையானது மற்றும் சத்துக்கள் நிறைந்தது. இந்த முருங்கைக் கீரை வைத்து வித்தியாசமான முறையில் எப்படி முருங்கைக் கீரை குழம்பு செய்யலாம் என்பதை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த முருங்கைக் கீரை குழம்பில் நாம் கீரையை போட்டு அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. அவ்வாறு செய்யாமல் கீரையின் முழு பலன்களும் உடலுக்கு கிடைக்கும் வகையில் இந்த குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை வைத்து சுவையான கீரை பொரியல் செய்வது எப்படி?

முருங்கைக் கீரை குழம்பு செய்வதற்கு முதலில் 75 கிராம் அளவு துவரம் பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்போடு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு பூண்டு பல்லை சேர்த்து வேகவைத்து எடுக்கவும். இரண்டு கைப்பிடி வரும் அளவிற்கு முருங்கைக் கீரையை சுத்தம் செய்து உருவி கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கால் ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் சீரகம், நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு 20 பல் பூண்டு, கறிவேப்பிலை மற்றும் 12 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் நன்கு வதங்கியதும் இரண்டு தக்காளிகளை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் தக்காளி வதங்கியதும் இதற்கு தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவை வதங்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வேகவைத்து வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு வைக்கவும். குழம்பு ஓரளவு கொதித்ததும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை சேர்த்து கிளற வேண்டும். இதை அதிக நேரம் கொதிக்க விடாமல் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டால் போதுமானது.

முருங்கைக் கீரை சேர்த்து குழம்பு இரண்டு நிமிடம் கொதித்ததும் இதனுடன் சிறிய துண்டு புளி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இப்பொழுது இதனை சூடாக இருக்கும் பொழுதே மற்றொரு மண் பாத்திரத்திற்கு மாற்றி மத்து கொண்டு இதை நன்கு கடைய வேண்டும். கீரை, தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்கு கடைந்து மசித்த பிறகு இதற்கான தாளிப்பை செய்யலாம். தாளிப்பு செய்வதற்கு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கால் ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பிறகு இதனை குழம்புடன் சேர்த்துவிடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையுடன் முருங்கைக்கீரை குழம்பு தயாராகி விட்டது.

Exit mobile version