பாரம்பரிய சுவையில் அட்டகாசமான கருணைக்கிழங்கு குழம்பு!

கருணைக்கிழங்கு பலரும் விரும்பி சமைக்காத ஒரு காய்கறி என்று சொல்லலாம். காரணம் இதை சாப்பிடும் பொழுது நாக்கில் அரிப்பு ஏற்படுவதால் கூட இருக்கலாம். ஆனால் இந்த கருணைக்கிழங்கை பயன்படுத்தி அட்டகாசமான ஒரு குழம்பு செய்ய முடியும். பாரம்பரியமான இந்த கருணைக்கிழங்கு குழம்பு சுவை, மணம் என அனைத்திலும் அட்டகாசமாய் இருக்கும். இப்பொழுது இந்த கருணைக்கிழங்கு குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கிராமத்து சுவையில் மணமணக்கும் மணத்தக்காளி வத்தல் குழம்பு!

முதலில் கால் கிலோ கருணைக்கிழங்கை மண் போக நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். கழுவிய இந்த கருணைக்கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். இரண்டு விசில் வரும் வரை வேக விடவும். குக்கரில் வெந்த பிறகு இதனை ஆற விடவும் ஆறிய பின்பு கருணைக்கிழங்கின் தோலை உரித்து இதனை நறுக்கிக் கொள்ள வேண்டும். ஏழு பல் பூண்டு, 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். இதனை இரண்டாக நறுக்கினால் போதும்.

இரண்டு பழுத்த தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது கடாயில் இரண்டு மேசை கரண்டி எண்ணெய் காய வைத்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு தோல் உரித்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பூண்டு நன்கு வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.

இந்த நிலையில் நான்கு ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் நறுக்கி வைத்திருக்கும் கருணைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இவற்றை வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் பெரிய எலுமிச்சை அளவு புளியை கரைத்து அந்த கரைசலை இந்த குழம்பில் ஊற்ற வேண்டும். தேவையான தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடலாம். இந்த குழம்பிற்கு புளி சற்று கூடுதலாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கருணைக்கிழங்கு சாப்பிடும் பொழுது நாக்கில் அரிப்பு ஏற்படாது.

அவ்வளவுதான் பாரம்பரிய சுவையில் அட்டகாசமான கருணைக்கிழங்கு குழம்பு தயாராகிவிட்டது!

Exit mobile version