மாவு உருண்டை ஒரு பாரம்பரியமான பலகார வகையாகும். பாசிப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து செய்யப்படும் இந்த மாவு உருண்டை இனிப்பு சுவையில் இருப்பதால் இதை அனைவரும் விரும்பி ரசித்து சாப்பிடுவார்கள். இந்த மாவு உருண்டையை செய்வது மிக கடினம் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இந்த முறையில் செய்தால் நீங்கள் மிக சுலபமாக மாவு உருண்டையை செய்யலாம். மாவுருண்டை செய்யும் பொழுது அதிலிருந்து வரும் மணம் உங்கள் வீட்டையே மணமணக்கச் செய்யும். வாருங்கள் சுவையான இந்த மாவு உருண்டையை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
மாவு உருண்டை செய்வதற்கு முதலில் நான்கு கப் அளவு பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாசிப்பருப்பை வெறும் வாணலியை குறைவான தீயில் வைத்து வறுத்துக் கொள்ள வேண்டும். இளம் சிவப்பாக வாசனை வரும் வரை இந்த பாசிப்பருப்பை வறுக்கவும். ஒரு கப் அளவு பொட்டுக்கடலையை எடுத்து இதனை வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை மொறுமொறுப்பாகும் வரை காய வைத்து ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பையும் காயவைத்த பொட்டுக்கடலையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த இந்த மாவினை நன்கு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐந்து கப் அளவு சீனி எடுத்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தட்டில் அரைத்த மாவு மற்றும் அரைத்த சீனியை சம அளவில் சேர்த்து நன்றாக இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். 6 குழிக்கரண்டி அளவு நெய்யை எடுத்து அதனை அடுப்பில் காயவைத்து உருக்கி கொள்ள வேண்டும். நெய் உருகி வாசனை வரும் பொழுது மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கிளறி விட வேண்டும். நெய்யை அதிகம் ஊற்றக்கூடாது உருண்டை பிடிக்கும் அளவிற்கு ஊற்றினால் போதுமானது. விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய முந்திரியை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்து கொள்ளலாம். சூடாக இருக்கும் பொழுதே எலுமிச்சம் பழம் அளவு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். உருண்டையை நன்கு அழுத்தம் கொடுத்து பிடிக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான மாவு உருண்டை தயாராகி விட்டது!