பொதுவாக வீடுகளில் விசேஷ நாட்களில் இனிப்பு செய்வது வழக்கம்.. அதுவும் பந்தியில் பரிமாறும் பாயாசம் என்றால் அனைவருக்கும் சற்று விருப்பம் அதிகம் தான். ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை நாம் பாயாசம் செய்யும் பொழுது அந்த பாயாசம் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசைதான். அப்படி இருக்க ப்ரோடீன் சத்து நிறைந்த மக்கனா வைத்து நாம் அருமையான பாயாசம் ஒன்று செய்யலாம் வாங்க…
இந்த பாயாசம் செய்வதற்கு ஒரு கப் மக்கனா எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் மக்காவை சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் வறுத்து வைத்திருக்கும் மக்கனா சூடு தணித்ததும் அதில் பாதியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதை கடாயில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பால் நன்கு கொதித்து வரும் பொழுது இரண்டு குழி கரண்டி பால் தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். இரண்டு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து பாலுடன் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து கடாயில் மீதம் இருக்கும் பாலுடன் கால் கப் சேமியா, மீதம் இருக்கும் மக்கனா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடங்களில் சேமியா மற்றும் மக்கனா நன்கு வந்துவிடும்.
அதன் பிறகு ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்ததும் நாம் பொடி செய்து வைத்திருக்கும் மக்கனா இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதைத்தொடர்ந்து பாலில் ஊற வைத்திருக்கும் குங்குமப்பூ கரைசலையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கரைசலை மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
அந்த நேரத்தில் மற்றொரு சிறிய கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பத்து முந்திரி பருப்பு, 10 கருப்பு திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெய்யுடன் வருத்த முந்திரி பருப்பு திராட்சை பழத்தை நம் பாயாசத்தில் சேர்த்து கொள்ளலாம். இதனுடன் இறுதியாக கால் தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான மக்கனா பாயாசம் தயார். இந்த பாயாசம் எப்பொழுதும் போல உள்ள பால் பாயாசத்தின் சுவையில் இருந்தாலும் மக்கனா வைத்து செய்திருப்பதால் புரோட்டின் சத்து சற்று அதிகமாக இருக்கும்.