ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் சாப்பிட ஆசையா.. வாங்க நம்ம வீட்டிலேயே சூப்பரான கடாய் பன்னீர் செய்வதற்கான ரெசிபி!

நம் வீட்டில் பன்னீர் சமைப்பதற்கு ஹோட்டல்களில் பன்னீர் சமைப்பதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளது. சுவையில் மட்டுமல்ல பார்ப்பதற்கும் கவரும் விதத்தில் இருக்கும் இந்த ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் நம் வீட்டில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

கடாய் பன்னீர் செய்வதற்கான மசாலாவை முதலில் தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி மிளகு, காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
வறுத்த இந்த பொருட்களை ஒரு ஓரமாக சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். அதன் பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளலாம். வறுத்த இந்த பொருட்களை கொரகொரவென பொடி செய்தால் போதுமானது.

இப்பொழுது அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கொடியாக நறுக்கி வைத்த 10 பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் நேரத்தில் ஐந்து முதல் ஏழு முந்திரி பருப்புகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வதக்கி பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம்.

மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் இரண்டு பிரியாணி இலை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், சிறிதளவு கஸ்தூரி மேத்தி, 2 பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக சதுர வடிவில் நறுக்கிய பெரிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

வாசனை மணக்க மணக்க ஐந்தே நிமிடத்தில் காரசாரமான பச்சை பட்டாணி குருமா!

அதைத்தொடர்ந்து இறுதியாக அரைத்த வெங்காயம் தக்காளி விழுதை கடாயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இந்த கலவையை இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக நாம் சதுர வடிவில் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர், முதலில் அரைத்த மசாலா பொடி, அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள், கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு கலர வேண்டும்.

பன்னீர் கடாயில் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் இருந்தால் போதுமானது. இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை, இரண்டு தேக்கரண்டி பிரஷ் கிரீம் சேர்த்து இறக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் கடாய் பன்னீர் தயார். இந்த பன்னீரை சப்பாத்தி, பரோட்டா, நான் இவற்றிற்கு வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version