என்னதான் விதவிதமாய் குழம்பு, கூட்டு என்று வைத்து சாப்பிட்டாலும் இறுதியில் ரசம் ஊற்றி சிறிதளவு சாதம் சாப்பிட்டால் தான் முழுமையாக சாப்பிட்டது போல் திருப்தி கிடைக்கும். அந்த அளவுக்கு ரசம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் நாட்டுக்கோழி ரசம் என்றால் சொல்லவா வேண்டும். எத்தனை டம்ளர்கள் குடிக்கிறோம் என்று கணக்கே இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
இந்த நாட்டுக்கோழி ரசம் சாப்பிட்டால் உடலுக்கு வலிமை தரும். சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற தொந்தரவுகளை அகற்றும். கிராமங்களில் குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு ஐந்தாம் நாள், ஏழாம் நாள், 10ஆம் நாள் நாட்டுக்கோழி ரசம் வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கொடுப்பார்கள். அவர்களுக்கு உடல் சீக்கிரம் சரியாகி உடல் சோர்வு நீங்கிட இந்த ரசம் தருவது உண்டு. இந்த நாட்டுக்கோழி ரசம் ஏற்கனவே தயார் செய்து வைத்த பொடிகளை வைத்து செய்யாமல் அப்பொழுது புதிதாக மசாலாக்கள் அரைத்து செய்தால் இதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். இந்த நாட்டுக்கோழி ரசத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
நாட்டுக்கோழி ரசம் செய்யும் முறை:
100 கிராம் சின்ன வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி தழை, இரண்டு நன்கு பழுத்த நாட்டு தக்காளிகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஏதும் சேர்க்காமல் எட்டு காய்ந்த மிளகாய்கள் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அதே கடாயில் சோம்பு, மிளகு, சீரகம், மற்றும் முழு மல்லி ஆகிய ஒவ்வொன்றிலும் இரண்டு ஸ்பூன் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து எடுத்த மிளகாயில் உள்ள காம்புகளை நீக்கி அதனுடன் வறுத்த முழு மல்லி, மிளகு, சீரகம், சோம்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்துடன் 10 பல் பூண்டு சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அரை ஸ்பூன் சோம்பு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். இவை பொரிந்ததும் இடித்து வைத்த சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி வதங்கிய பின்பு அரை கிலோ சுத்தம் செய்த நாட்டுக் கோழி சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். நாட்டுக்கோழி கறி நன்றாக எண்ணெயில் வதங்க வேண்டும்.
ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரைத்து வைத்த மசாலா பொடி இதனுடன் சேர்க்க வேண்டும்.
நன்றாக கொதி வந்து நாட்டுக்கோழி நன்கு வெந்ததும் மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை தூவி சிறிது நேரம் கழித்து இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் மணமணக்கும் சுவையான நாட்டுக்கோழி ரசம் தயார்!