மாலை நேர தேநீர் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த மாலை நேர தேநீருடன் ஒரு சிற்றுண்டி இருந்தால் தான் அந்த நாளே நிறைவானது போல இருக்கும். பெரும்பாலும் கடைகளில் விற்கும் சிற்றுண்டிகளை விட வீட்டிலேயே சூடாக செய்து சாப்பிடும் சிற்றுண்டி பலருக்கும் பிடித்தமானது. அப்படி வீட்டிலேயே செய்யும் ஒரு சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் தான் வெங்காய பக்கோடா. இதை செய்ய அதிக நேரம் தேவையில்லை. எளிமையாக செய்துவிடலாம் அதே சமயம் மிக சுவையாகவும் இருக்கும்.
சுவையான மொறு மொறுப்பான காலிபிளவர் பக்கோடா! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இப்படி செய்யுங்கள்…
வெங்காய பக்கோடா செய்வதற்கு இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயத்துடன் நான்கு பச்சை மிளகாய்களை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவு சோம்பு சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்துக் கொள்ளலாம். சிறிதளவு கறிவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும். அதேபோல் சிறிதளவு கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இதனை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இதில் அரை கப் அளவு கடலை மாவு மற்றும் கால் கப் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வெங்காய பக்கோடாவிற்கு தண்ணீர் சேர்த்து பிசைய கூடாது. காரணம் வெங்காயத்திலிருந்து தண்ணீர் வெளிப்படும். எனவே பொரிக்கும் நேரத்தில் லேசாக தண்ணீர் தெளித்து பொரித்து எடுக்க வேண்டும். இப்பொழுது பக்கோடாவை பொறிக்க தேவையான அளவு எண்ணெயை கடாயில் காயவைத்து கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த வெங்காயத்துடன் சிறிதளவு தண்ணீரை தெளித்து சிறு சிறு பகுதிகளாக எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். நன்கு சிவந்து மொறுமொறுவென வந்ததும் இதனை எடுத்து விடலாம்.
அவ்வளவுதான் அட்டகாசமான சுவையுடன் சுட சுட வெங்காய பக்கோடா தயாராகி விட்டது!