உங்கள் சமையலறையில் கரப்பான் பூச்சி அல்லது வண்டுகள் தென்படுகிறதா அப்போ இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி விரட்டிடுங்க!

சமையலறை வீட்டில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான பகுதி. இந்த சமையல் அறையில் நீங்கள் சுவை நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சமைத்தாலும் அந்த சமையலறை தூய்மையாக இல்லாவிட்டால் வியாதிகள் நிச்சயம் பரவும். குறிப்பாக அதில் கரப்பான் பூச்சி போன்ற ஜந்துக்கள் அதிகம் இருந்தால் அதனால் அதிக அளவு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. என்ன தான் சமையலறையை தூய்மையாக வைத்திருந்தாலும் சமையலறையில் எங்கிருந்துதான் கரப்பான் பூச்சி வருகிறது என்றே தெரியாமல் இரவு நேரத்தில் அதிக அளவு கரப்பான் பூச்சி நடமாடுவதை பார்த்திருக்கலாம்.

பெரும்பாலும் இவை சிங்கின் அடிப்பகுதிகள், பழைய அட்டைப்பெட்டிகள், தண்ணீர் தேங்க கூடிய பகுதிகளின் வடிகால்கள், அடுப்படியின் மூலை முடுக்குகள் போன்ற இடங்களில் இருந்து அதிகம் வரலாம். சமையல் அறையில் நீங்கள் அடிக்கடி தண்ணீர் வைத்து துடைத்தாலும், சுத்தம் செய்தாலும் இந்த கரப்பான் பூச்சியின் தொந்தரவுகள் குறைந்த பாடு இல்லை என்றால் நீங்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பார்க்கலாம்.

இந்த வழிமுறையை பின்பற்றினால் உங்கள் கிச்சனில் கரப்பான் பூச்சி மற்றும் பிற பூச்சிகளின் வரவு குறைந்து மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

1. வெந்நீர் மற்றும் வினிகர்:

இது எளிமையான ஒரு செய்முறையாகும். அதற்கு முதலில் சிறிதளவு சுடுதண்ணீர் எடுத்து அதனுடன் பாதி அளவு வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை சமையலறையின் அலமாரியில் உள்ள அடுக்குகள், சமையலறையின் மேடை போன்ற அனைத்து பகுதிகளையும் நன்கு துடைத்து விடவும். மேலும் சமையல் அறையில் பாத்திரம் கழுவும் பகுதியின் வடிகால் குழாயில் சிறிது இந்த திரவ கரைசலை ஊற்றி விடவும். இதன் மூலம் கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபடலாம்.

2. வெந்நீர், எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா:

கரப்பான் பூச்சிகளை விரட்ட இது மற்றொரு எளிமையான டிப்ஸ் ஆகும். ஒரு லிட்டர் அளவு சுடு தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து சேர்த்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும். இதனை கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் ஊற்றி விடலாம். சமையலறையின் மேடைகள் மற்றும் அலமாரியில் துடைத்து விடலாம். இதன் மூலம் கரப்பான் பூச்சி வருவதை தடுக்க இயலும்.

3. போரிக் அமிலம் மற்றும் சர்க்கரை:

போரிக் அமிலம் மற்றும் சர்க்கரை இரண்டும் கரப்பான் பூச்சியை விரட்டிட ஒரு சிறந்த தேர்வு. சர்க்கரை வண்டுகள் மற்றும் பூச்சிகளை கவர்ந்து இழுக்க தன்மையுடையது இது கவர்ந்து இழுக்கும் பூச்சி மற்றும் வண்டுகளை போரிக் அமிலம் உடனடியாக கொன்றுவிடும். போரிக் அமிலம் மற்றும் சர்க்கரை இரண்டையும் சம அளவில் கலந்து இதனை பூச்சிகள் வரும் இடத்தில் தூவி விட்டால் பூச்சிகள் வண்டுகளை வரவிடாமல் தடுக்கலாம்.

4. வாசனை எண்ணெய்கள்:

சரும பராமரிப்புகோ இல்லை கூந்தல் பராமரிப்பிற்கோ பயன்படுத்தக்கூடிய சில எண்ணெய் வகைகளின் வாசனை பூச்சிகளை விரட்டும் தன்மை உடையதாக இருக்கும். குறிப்பாக புதினா எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய் பூச்சிகளை அண்ட விடாது. இவைகளை துணியில் லேசாக நனைத்து பூச்சிகள் வரும் இடத்தில் வைத்து விட்டால் பூச்சிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

5. வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்த சுவையான ஒரு காய்கறி வகை. இந்த வெள்ளரிக்காய்க்கு கரப்பான் பூச்சியை விரட்டும் தன்மை இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! வெள்ளரிக்காயின் சில துண்டுகளை சமையலறையில் பூச்சிகள் வரும் இடத்தில் வைத்து விடலாம் இது கரப்பான் பூச்சியை அண்ட விடாது.

6. வேப்பிலை மற்றும் வேப்ப எண்ணெய்:

வேப்ப இலையின் வாசனையும் பூச்சிகளுக்கு பிடிக்காத ஒன்று. வேப்பிலையை நாம் பூச்சிகள் வரும் இடத்தில் வைக்கலாம். அல்லது சுடுதண்ணீரில் சிறிதளவு வேப்ப எண்ணெய்யை கலந்தும் அதனை பூச்சி வரக்கூடிய இடத்தில் தெளித்து விடலாம். இதனால் இது பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி பூச்சிகள் வருவதை தடுக்கிறது.

7. பட்டை:

வாசனை நிறைந்த பட்டையை சேர்ப்பதால் உணவுகள் எவ்வளவு தூரம் மணம் நிறைந்ததாக இருக்கிறதோ. அதே வாசனை பூச்சிகளையும் விரட்ட கூடியது. பட்டையை பொடி செய்து அதனை சமையல் அறையில் பூச்சி வரக்கூடிய இடத்தில் தூவி விடுவதன் மூலம் பூச்சிகளின் வரவை ஒழிக்க முடியும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நம் சமையல் அறையில் இருக்கக்கூடிய பொருட்கள் தான். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு எளிமையாக கரப்பான் பூச்சியின் தொல்லையிலிருந்து விடுபடுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்!

Exit mobile version