கிச்சனில் பொருட்கள் வீணாகாமல் இருப்பதற்கு சில சிறிய டிப்ஸ்களை பாலோ செய்தால் போதும். இதன் மூலம் பொருட்கள் வீணாவதை தடுப்பதோடு பெருமளவு பணத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த டிப்ஸ்களை பாலோ செய்வதற்கு மெனக்கெட வேண்டும் என்று தேவையில்லை. சில எளிமையான வேலைகளை செய்தால் போதும். வாருங்கள் அவற்றுள் சில டிப்ஸ்களை இப்பொழுது பார்க்கலாம்.
வீடுகளில் இரவு சாதம் மீதம் ஆகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்போம். ஒருவேளை தண்ணீர் ஊற்ற மறந்து விட்டால் சாதம் மறுநாள் கொஞ்சம் சொதசொதப்பாகிவிடும். அதிக அளவு சாதத்தை வீணாக்காமல் இருக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் மீதமாகியுள்ள சாதத்தை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடங்கள் கழித்து இந்த சாதத்தை வடித்துப் பார்த்தால் அப்பொழுது வடித்த சாதம் போலவே இருக்கும்.
பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கிய பிறகு நாம் அந்த பாக்கெட்டை திறந்து அதிலிருந்து ஓர் 2 பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்ட பிறகு அந்த பாக்கெட்டை அப்படியே வைத்து இருப்போம். சில நாட்களில் அதில் உள்ள அனைத்து பிஸ்கட்களும் நமத்து போய் மென்மையாகிவிடும். இதை சாப்பிட முடியாது. எனவே பிஸ்கட் பாக்கெட் வாங்கினால் அந்த பாக்கெட்டில் உள்ள பிஸ்கட்களை ஒரு கண்ணாடி ஜாரில் ஸ்டோர் செய்து வைக்கலாம். அந்த கண்ணாடி ஜாரின் அடியில் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை மற்றும் இரண்டு லவங்கங்களை போட்டு வைத்து அதன் மேல் இந்த பிஸ்கட்களை அடுக்கி இறுக்க மூடி வைத்து விட்டால் போதும். பிஸ்கட் நமத்து போகாமல் அப்படியே இருக்கும்.
மிளகாய் தூள் பெரும்பாலும் அரைத்து வைத்து மாத கணக்கில் நாம் பயன்படுத்துவோம். சில நாட்களில் இந்த மிளகாய் தூள் கெட்டி பட்டுவிடும் அல்லது வண்டு வந்து விடும். அவ்வாறு இல்லாமல் இருக்க ஒரு வெள்ளை துணி எடுத்துக் கொள்ளவும். அந்த வெள்ளத் துணியினுள் ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து அதனை இறுக்க முடிச்சு போட்டு மிளகாய் தூள் டப்பாவில் வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் மிளகாய் தூள் வண்டுகள் ஏதும் வராமல் நிறமும் மாறாமல் நீண்ட மாதத்திற்கு நன்றாக இருக்கும்.
அதேபோல் கல் உப்பு நாம் ஜாடியில் கொட்டி வைத்திருந்தாலும் சில நாட்களில் நீர்த்துப் போய்விடும். அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கு ஒரு தேங்காயின் ஓட்டை உள்ளே போட்டு வைத்து விடலாம். தேங்காய் ஓடு ஈரத்தன்மை இழுக்கக்கூடிய ஆற்றல் உண்டு. இவ்வாறு செய்வதால் கல்லுப்பு நீர்த்துப் போகாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.