தோசை, பூரி, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்ற ஒரே சைடிஷ் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா! சுவையான ரெசிப்பி!

தோசை, பூரி, சப்பாத்தி என விதவிதமாக சமைக்கும் பொழுது அனைத்திற்கும் தனித்தனியாக சைடிஷ் செய்வது சற்று சிரமமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரே சைடிஷ் வைத்து அனைத்திற்கும் பொருந்தும் வகையில் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்யலாம் வாங்க. வீட்டிலேயே சுவையான மற்றும் ஹெல்த்தியான பட்டாணி குருமா செய்வதற்கான ரெசிபி இதோ.

இந்த குருமா செய்வதற்கு முதலில் நான்கு உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில்கள் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதே நேரத்தில் மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கசகசா பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மூன்று தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் மையாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை செல்லும் வரை எண்ணையோடு நன்கு வதக்க வேண்டும்.

வெண்டைக்காய் வைத்து  எப்பவும் காரக்குழம்பு, சாம்பார் தானா!  நார்த் இந்தியன் ஸ்டைல் பிந்தி மசாலா!

அதன் பின் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி கறிமசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி மட்டன் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாக்கள் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் கலந்து கொடுக்க வேண்டும்.

அதன் பின் பச்சை பட்டாணியை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது வேகவைத்து இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா தயாராக இருக்கும். இதில் வாசனைக்காக மல்லி இலைகள் தூவி பரிமாறலாம். தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்திற்கும் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா ஏற்ற பொருத்தமாக இருக்கும்.

Exit mobile version