தினமும் நம் வீடுகளில் மதிய உணவிற்கு சாம்பார், ரசம், மோர் என ஒரே விதமான சமையலை திரும்பத் திரும்ப சாப்பிடும் பொழுது சில நேரங்களில் சலித்து விடுகிறது. அதற்கு பதிலாக சற்று வித்தியாசமான குழம்பு வகைகளை வைக்கும் பொழுது சாப்பிடுபவர்களின் மனதை மகிழ்விக்கும் விதமாகவும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் விதமாகவும் அமையும். அந்த வகையில் இன்று பருப்பு வடை குழம்பு செய்து கொடுத்து நம் வீட்டில் உள்ளவர்களை திருப்திப்படுத்தலாம் வாங்க.
முதலில் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொரிந்ததும் 20 சின்ன வெங்காயத்தை நன்கு தோல் உரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த வெங்காயத்தை எண்ணெயுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் 10 பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், ஒரு கையளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இரண்டு பழுத்த தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கியதும் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், 2 தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளவும்.
அதன் பின் எலுமிச்சை பழம் அளவு புளியை நன்கு ஊற வைத்து கரைத்து அதன் சாற்றை இதில் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். அந்த சேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய், 5 சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த அரைத்த தேங்காய் விழுதை கொதித்து கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். குழம்பு தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து மிதமான தீயில் குழம்பை 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும் .
தர்பூசணி வைத்து ஜூஸ், அல்வா மட்டும்தான் செய்ய முடியுமா? வாங்க அசத்தலான தர்பூசணி சாதம் செய்யலாம்!
15 நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது குழம்பிலிருந்து என்னை பிரிந்து வந்தால் தற்பொழுது குழம்பு தயாராக உள்ளது. இந்த பக்குவத்தில் தேவையான பருப்பு வடைகளை அதில் சேர்த்து ஒரு முறை கிளறி கொடுத்தால் போதுமானது. ஐந்து நிமிடங்கள் கழித்து பரிமாறினால் சுவையான பருப்பு வடை குழம்பு தயார். இதை வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்பாக மல்லி இலைகளை பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறினால் வாசனை சற்று கூடுதலாகவும் சுவையாகவும் இருக்கும்.